Wednesday, June 2, 2010

நூறுக்கு முன்னால் வரும்...

இது நூறாவது பதிவு.தமிழில் நூறுக்கு முன்னால் தொண்ணூறு வருவதும் ஆயிரத்துக்கு முன்னால் தொள்ளாயிரம் வருவதும் போல பிற மொழிகளில் வருகிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பித்துற்ற நிலையில் விரல் வழி உளறப்போகிறேன் என்பது தெரிகிறது.

திடீரெனத் தோன்றும் மனதின் பாடல் பண்டையதொரு மெட்டில்...இந்தப் பச்சைக்’கொடி’*க்கொரு செவ்வந்திப் பூவினில் தொட்டிலைக் கட்டிவைத்தேன். அதில் பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை மெல்லென இட்டுவைத்தேன். நான் யார்? யார்? யாரோ?... என்று ஒலிக்கிறது. நிச்சயமாகவும் அது யேசுதாஸின் குரல் அல்ல. எஸ். வரலட்சுமியின் குரலில் இன்னும் கூடக் கொஞ்சம் சோகபாவமும் ஏகாந்தமும் கூடக்கூடியதே என் மனதில் ஒலிக்கும் குரல்.

உண்மையில் எனது மெயில் பக்கத்தில் பக்கவாட்டில் ஓடிய பெயர்கள் பட்டியலில் சில நண்பர்களின் பேருக்கு அருகில் பச்சை நிறக் கடுகுப்பொட்டு ஒளிர்கிறது. எப்போது பொட்டுகள் ‘ஆன் லைன் ’காட்டினாலும் உடனே ஜி - டாக்- கில் எழுத்துரையாடிய காலமும் ஸ்கைப்பில் உரையாடிய காலமும் நினைவில் வந்துபோனது. இன்றும் ஆன் லைனில் சில நட்பின் பெயர்கள் ஒளிர்கின்றன.

எரி தழல் நரகத்தில் அந்தரத்தில் பொட்டித்து வெப்பக்காற்றில் சிதறுகிறது நான் நாவிய கடுகு.

பேரழகுகளே... பெருந்துயரங்களே... காவியமாய்ப் பூத்துப்போன சிற்றலகுகளே.. சிறு மிகு தருணங்களே! இந்த விநாடியன்ன விநாடிகள் இனி வாய்க்காமல் போவதே புரிதலின் மேம்பட்ட நிலையாக இருக்கும்.

நான் நாடித் திரிந்தவையும் தேடித் தேர்ந்தவையும் இணைந்து பரிசளித்தவை இப்போதுள்ள தனிமை.விடியல்களில், இருப்பின் பேதமையே என் உடலின் இருப்பென கழிவிரக்கம் கொள்ளவைக்கும் இதை கசப்பின் சுவையோடு விழுங்கிக்கொள்கிறேன். கலனும் களமும் பெரிதாகையால் கடலினும் பெரிது இது. பரவசமுறும் என் இதயத்தினும் சிறிதே.

நன்று. இது நிற்க. தீர்க்க.

வலைத்தளம் தோன்ற உடன் துணையாய் இருந்த தோழி சாந்திராணி, தோன்றாத் துணையாய் இருந்த நேசமித்ரன், வடிவமைப்பில் உசாவும் ஜகநாதன்.கே ஆகியோருக்கு நன்றி தெரிவித்தல் என்பதை சடங்காய் ஆற்றி நூறை நிறைவு செய்கிறேன். முன்னிகள் தொடரிகள் பற்றிய பிரக்ஞை எப்போதும் உண்டு.

* - பழையபாடல் பாடபேதத்துடன் இங்கு பயிலப்படுகிறது.பாடல் இடம் பெற்ற படம் , ‘நீதிக்குத் தலை வணங்கு’ என எண்ணுகையில் புன்னகை வருகிறது . சிரித்த முகத்துடன் நான் இப்போது தொங்கு கயிற்றுக்கு முத்தமிடலாம். ஆனால் கழுவேறத் தயாரில்லை.

4 comments:

திருநாவுக்கரசு பழனிசாமி said...

அண்ணா...வாழ்த்துக்கள்.

adhiran said...

enna paththi yosikkave maattiyo?

regards.

MAHI.

விவேக் said...

இன்னும் பல நூறு பதிவுகள் கண்டிட
வாழ்த்துக்கள்! அண்ணா!

Nathanjagk said...

அண்ணன் கணக்குல அநியாயதுக்கும் வீக்கு..!
யாரோட விரலில் கூட்டினால் இது நூறாகும்??