Tuesday, June 1, 2010

தார்...கபர்தார்

முந்தாநாள் விண்ணொளிப்பெட்டிகளில் செய்தி பார்த்தேன். நேற்றிலிருந்து சென்னையில் கடையில் பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்கவேணும்(ஜூன் -1) என மேயர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.போர்டே இல்லாமல் கடை நடத்தும் வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பாக பெயர்ப்பலகை வைத்துத் தருவதும் அவரது திட்டமாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

நேற்று அங்காடித்தெருக்களின் பக்கம் போகவாய்ப்பில்லை.எத்தனை கடைகளை ‘தமிழ்ப் பலகை’ இல்லாததற்காக அடைத்து நடவடிக்கை எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. வியாபாரிகள் விஷயத்தில் இவ்வளவு தீவிரம் கடைப்பிடிக்கவேண்டியதில்லை.(நீலகிரி மாவட்டம் கம்பத்தில் பெயர்ப் பலகைகள் பெரும்பாலும் மலயாளத்தில் இருப்பது தனிக்கதை.)

பொருட்கள் அதன் (தரம் என்பது இங்கு மறுபுறம்) அதன் ‘டாம்பீகம் மற்றும் விளம்பரம்’ காரணமாக செலாவணி ஆகின்றனவேயன்றி போர்டுக்காக அல்ல. வெளியில் வாட்ச்மேன் வைத்து முகமன் கூறி அழைப்பார்களே அன்றி கடைக்காரர்கள் கையைப் பிடித்து உள்ளே இழுப்பதில்லை. மாநகரத்தந்தை மா.சு வை விடவும் பணக்கார வியாபாரிகள் நிறைந்த உலகமிது. அவர்களுக்குத் தெரியும் பண்டத்தை எப்படி விற்பது என்பது.

தமிழில் பெயர் எழுதாவிட்டால் அங்கு போகமாட்டேன் என்கிற சொரணை தமிழருக்கே இருந்துவிட்டால் இப்படியான சட்ட திட்டங்களுக்கு இல்லை. கடுகுக்குத் தமிழில் பெயர் தெரியாத குழந்தைகள் பலர் வளர்ந்து உருவாகி வ(ள)ரும் சென்னையில் பெயர்ப்பலகை லத்தீன் அல்லது பிரெஞ்சில் இருந்தால்தான் என்ன. அப்படி என்ன தமிழ்க்கன்னி உங்கள் கனவில் வந்து நொட்டுகிறாள்? தமிழை இப்படியெல்லாம் மீட்கச்சொல்லி.

சதுர அங்குலத்துக்குக் கணக்குப் போட்டு கடை,கல்லா,கம்ப்யூட்டர் பில்லிங், கடை முகப்பு அவ்வளைவையும் பொறியமைவு கொண்டு டிசைன் செய்த (எனதருமை) வியாபாரப் பெருங்குடி மக்கள் ஏன் தமிழில் பெயர்ப்பலகை வைக்கவேண்டும். குன்றா மூன்றாம் பிறை என்றோ நல்லதங்காள் வருஷம் என்றோ அவர்களுக்கு தங்கமும் புடவையும் விற்கத்தெரியும்.

தங்கத்தின் மோகத்திலிருந்தும் பட்டு மோகத்திலிருந்தும் விடுபட்டுவிட்டாலே இங்கே பாதிப்பரலோகம் மண்னில் லபித்துவிடும்.அவனவன் அவனவன் வேலையை அவ்வளவு நொம்பலங்கள் அல்லது இன்பங்களினூடே பார்த்துக்கொண்டு போவதற்கிடையில் இருப்பை நிரூப்பிக்க இவர்கள் போடும் கோட்டாலை வெந்தணலில் புழுங்க வைக்கிறது.

எனது துரதிர்ஷ்டம்தான் போயும் போயும் இப்படி ஒரு செய்தியை நானும் sun net work-கில் கேட்டிருக்கவேண்டியதில்லை.எழுத்துகளை அழிக்க தார் எடுத்த வமிசத்தார் எம் தமிழ்ச்சிங்கத்தார் மரபில் இன்னும் என்னென்ன நடக்குமோ?

2 comments:

கதிரவன் said...

//அப்படி என்ன தமிழ்க்கன்னி உங்கள் கனவில் வந்து நொட்டுகிறாள்?//

:-)

விவேக் said...

//நீலகிரி மாவட்டம் கம்பத்தில் பெயர்ப் பலகைகள் பெரும்பாலும் மலயாளத்தில் இருப்பது தனிக்கதை.)///

அண்ணா, கம்பம் நீலகிரி மாவட்டத்தில் இல்லை..தேனி மாவட்டம்..

உங்கள் எழுத்துக்கள் அனைத்தும் அருமை.. எனக்கும் மூலனூருக்கும் ஒரு சம்பந்தம் உண்டு
எங்க அம்மாயி ஊரு பேரநாயக்கன் வலசு...சொந்த ஊரு தாராபுரம்