Friday, January 8, 2010

பின் தொடரிகள் மற்றும் முன் உயிரிகள்...

புத்தகக் கண்காட்சி பற்றி நான் எழுதியதன் பகுதியின்  பின் ஊட்டத்தில், தம்பி என அழைக்கப்படுவதை விரும்புகிற நண்பன் செல்வேந்திரன் ரமேஷ் வைத்யாவைப் பார்த்தீர்களா எனக் கேட்டிருந்தார்.
இது வால் பகுதியில் பகிர்ந்துகொள்ளத்தக்கதல்ல என்பதால் ‘இல்லை’ என்கிற பதிலை பட்ட(வர்த்தன)ப் பகுதியிலேயே  பகிர்ந்து கொள்ளுகிறேன்.

அடுத்து வருவது செல்வேந்திரன் அனுப்பிவைத்த ஃபாலோயர்ஸ் பகுதிக்கான படம் பற்றியது. முதற்கண் இந்த ஃபாலோயர்ஸ் என்கிற வார்த்தையே தலையில் மகுடம், முள் மகுடம்,அல்லது மங்கிக் குல்லாய் போன்றவற்றை மனதில் தோற்றுவிப்பது.

இருப்பினும் இதை , ‘உனக்கு நான் ஃபாலோ எனக்கு நீ ஃபாலோ’- என்று ஏற்றுக்கொள்ளலாம். மிகப் பிரக்ஞை பூண்டுவிட்டால் பேச்சு அரிதாகிவிடும்.35 என்கிற தேர்வு மதிப்பெண்ணைக் கடந்த பின்னும் எனக்கு இதுவரை பெண் ஃபாலோயர்ஸ் வந்ததாய் அதிகாரபூர்வ தகவலில்லை.

‘மண் குதிரை’ என்கிற பால் தீர்க்க முடியாத பெயரெல்லாம் வருகிறது எனினும், மண் குதிரையை நம்பி கற்பனை ஆற்றில் இறங்க முடியாது.

ஃபாலோயரில் முதன் முதலாக ஒரு பெண் படத்தைப் பார்த்தபோது முதற்கணம் திகீரென்றது. வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் உருவமுள்ள ஒரு உருண்டை உருண்டது. அது மூச்சுக்குழாயை நசுக்கியது. அப்புறம் அந்தப் பெண்ணின் மார்புப் பகுதியில் சுட்டுவிரல் (இது எலியின் சுட்டுவிரல்)  பட  மிடுக்கிப் பார்த்தால் செல்வேந்திரன் என்று இருந்தது.

பெண்களின் போதாமை இலக்கியக் கூட்டம் முதல் இந்தி(ரி)ய பாராளுமன்றம் வரை எல்லா இடத்திலும் உண்டு. அதை பிம்பங்கள் கொண்டு இட்டு நிரப்ப வேண்டிய அவசியமேயில்லை.

செல்வேந்திரனே ஐஸ்வர்யாராய்க்கு நிகரான அழகன்தான். மீசை வைத்து தைராய்டுப் பிரச்னைகளுக்காக மாத்திரை எடுத்துக்கொள்கிற ஐஸ்வர்யாராய்.ஒரு அறுபத்தொன்பது கிலோ தாஜ்மகால்.அப்படி அவரது படம் இல்லாவிட்டாலும் எரிமலை,பள்ளத்தாக்கு,நீல வான்,வேன்,மான்... என எத்தனையோ படங்கள் உள. அவற்றில் ஒன்றை அவர் படமாக வைக்கலாம்.

மன ஆழத்தின் முடியலத்துவம் உளவியல் நோக்கில் யாருக்கும் இடறினாலும்
(காதுள்ளவர் கேட்கவே கடவர்), எந்த வித மயக்கங்களுடனும் செத்துப்போக விரும்பவில்லை என்கிற காந்தியாரின் வாக்கு நினைவுக்கு வருகிறது.

5 comments:

Ashok D said...

மண்குதிரை என்பவர் நல்ல கவிஞர்.. அவரை கிளிக் செய்து படிக்கவும்... உங்களின் பெயரை கதைகளில்(பத்திரிக்கைகளில்) பார்த்துயிருக்கிறேன்.. மன்னிக்கவும் எதையும் படிக்கவில்லை...

இப்போதுதான் படிக்க ஆரம்பித்தேன்.. 6 வது வரியில் கவிஞர் பெயர் வந்ததால் இந்த பின்னோட்டம் :)

Balakumar Vijayaraman said...

//முதற்கண் இந்த ஃபாலோயர்ஸ் என்கிற வார்த்தையே தலையில் மகுடம், முள் மகுடம்,அல்லது மங்கிக் குல்லாய் போன்றவற்றை மனதில் தோற்றுவிப்பது.
//

பின்தொடரிகள் பற்றி எனது நினைப்பும் இது போலவே இருந்தது, இருக்கிறது.

பகிர்விற்கு நன்றி.

வணக்கங்கள் !

selventhiran said...

ஹா... ஹா... அண்ணா சிரித்து முடியவில்லை.

நேசமித்ரன் said...

:)

எப்பிடி அண்ணே இப்பிடியெல்லாம்
அங்கதம் அங்கம்எங்கும்

Nathanjagk said...

இந்த 'துரத்தல் துறை' அதாங்க பாலோயிங்.. வாழ்வியல், சார்பியல் மட்டுமல்லாது இணையயியலிலும் பெண்களைத்தான் ஆண்கள் துரத்த வேண்டியதாயிருக்கிறது.

உங்கள் ஆர்வம், வேட்கை, தீர்மானங்கள், குறிக்கோள்கள், ​வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் மற்றும் இத்இத்இத்யாதிகள் எனக்குப் புரிகின்றன. அதனால் எனக்கு எந்த பிரயோசனமுமில்லை என்ற உங்க ​வேதனையும் புரிகிறது.

இதுபற்றி என் பிளாக்கில் ஒரு விளம்பரம் அறிவிக்கலாமா என்று இருக்கிறேன் (அதுக்கு உனக்கு என்னடா தகுதீ?) இப்படி:
பெயர்: க.சீ.சிவக்குமார்
வயது: அதான் பேரிலயே குமார் ​சொல்லியிருக்கம்ல
தொழில்: இமை பொழுதும் சோராதிருத்தல்
பிளாக் முகவரி: நள்ளெண் யாமம்
அடையாளம்: காமக்கலனும் உடனுறை நட்பினன் (......)

கருத்தறிய ஆவல்.