Sunday, June 19, 2011

ஒரு பரவச தருணம்

’கன்னி வாடி’ என்கிற என் ஊரின் பெயரை முதன் முதலில் திரைப்படம் ஒன்றில் கேள்விப்பட்டதும் பார்த்ததும் கோழி கூவுது என்கிற திரைப் படத்தில்தான். ஒரு கல்யாண நிச்சயதார்த்த ஓலை வாசிப்பில் அந்தப் பெயரைச் சொல்வார்கள்.

மூன்று நாட்களுக்குமுன் வேறொன்றும் கேள்விப்பட்டேன். பழைய படம் ஒன்றில் ‘கன்னி வாடி’ என்கிற ஊர்ப்பெயர் வருவதுடன் அந்த ஊரையே காட்டுகிறார்கள். ஆனால் கேள்விப்பட்ட விவரங்கள் காட்சி வர்ணனை அடிப்படையில் எங்கள் கன்னி வாடியோ அல்லது திண்டுக்கல் மாவட்ட அப்பிய நாயக்கர் கன்னிவாடியோ அல்ல அது. சேலத்துக்குப் பக்கத்தில் எதோ ஒரு ஊரை கன்னி வாடி என்று காட்டியிருக்கிறார்கள்.

என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம்,காளி என்.ரத்தினம். டி.எஸ்.துரைசாமி, டி.ஆர்.ராமச்சந்திரன்என்கிற நகைச்சுவைக் காவியர்களோடு சி.டி.ராஜகாந்தமும் நடித்த படம்.ராஜ காந்தம்தான் கன்னிவாடிக்காரி. சௌ சௌ என்கிற படம்:அதாவது மிக்சர் என்கிற அர்த்தத்தில். பிளாக் மார்கெட், விடாக்கண்டன் கொடாக் கண்டன் ஆகிய பார்ட்டுகளும் அதே படத்தில் உண்டு. ஒரு படம் மூன்று கதை கான்செப்ட்.

சைக்கிள் ஓட்டத் தெரியாத துரைசாமி கன்னி வாடிக்குப் பெண் பார்க்கப் போவது சைக்கிளில். கன்னீ வாடி! என்கிற பெயரே காளி என்.ரத்தினத்தை ஈர்த்துவிட துரைசாமியை சைக்கிளில் வைத்து அந்த ஊருக்குத் தள்ளிக்கொண்டே செல்கிறார். ஒரு சுண்டல் கிழவி மீது சைக்கிள் மோத சண்டையாகி தப்பிச்செல்லும் துரைசாமி பெண் வீட்டுக்குப் போய்விட தப்பிஓடி ஏரிக்கரை அருகில் ஊரின் பெயர்ப் பலகையைப் பார்க்கும் ரத்தினம் கன்னி வாடி, கன்னி வாடி என ராகம்போட்டு உச்சரித்துக்கொண்டு அங்கே தண்ணீருக்கு வரும் ராஜகாந்தத்தை ஓரக் கண்ணால் பார்க்கிறார்.

ராஜகாந்தம் தலைமையில் கும்பல் மொத்தமாக ரத்தினத்தை மொத்த அவர் தப்பித்து வந்து சேரும் இடம் பெண் பார்க்கும் வீடு.... இப்படியாக அவர்களது சைக்கிள் பயணம் முடிகிறது.

வாழ்வின் திசைப் போக்கை மாற்றிய மறக்க இயலாத இடங்களில் ஒன்றான பெங்களூர் செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் நான் அவரைச் சந்திக்க நேர்ந்தது. கெழுதகை அண்ணார் விஜயன் விஜயன் மூலமாக அறிமுகமான மறு நொடியில் என் ஊர்ப் பெயரை விசாரித்ததும் ‘கண்களில் காட்சிகளே விரியும்படி ஏராளமான தகவல்களுடன்’ இதைப் பகிர்ந்துகொண்டவர் விட்டல் ராவ்.

அவரது ‘நதி மூலம்’ நாவலை இன்னொரு முறை படிக்க ஆசைப் படுகிறேன். கிடைத்தால் சௌ சௌ படத்தினையும் பார்த்திட வேண்டும்.

2 comments:

Unknown said...

பொதுவாக ப்ளாஷ்பேக்குகளுக்கு ஈர்ப்பு அதிகம். இந்தப் பதிவைப் படித்தவுடன் எனக்கும் அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது. கோவையில் ஷாலினி அஜித்குமாரின் அண்ணன் ரிஷி நடத்தி வரும் சினிமா பாரடைஸ் எனும் வீடியோ லைப்ரரியில் அந்தப் படம் கிடைத்தாலும் கிடைக்கலாம். முடிந்தால் பாருங்கள்.

Anonymous said...

எனக்குக் 'கன்னிவாடி' தெரிய வந்தது உங்கள் சிறுகதைத்தொகுப்பு மூலம்தான். நீங்களும் கன்னிவாடி சிவக்குமார் ஆகிப்போனீர்கள்.

ஆழியாள்