Sunday, June 19, 2011

ஒரு பரவச தருணம்

’கன்னி வாடி’ என்கிற என் ஊரின் பெயரை முதன் முதலில் திரைப்படம் ஒன்றில் கேள்விப்பட்டதும் பார்த்ததும் கோழி கூவுது என்கிற திரைப் படத்தில்தான். ஒரு கல்யாண நிச்சயதார்த்த ஓலை வாசிப்பில் அந்தப் பெயரைச் சொல்வார்கள்.

மூன்று நாட்களுக்குமுன் வேறொன்றும் கேள்விப்பட்டேன். பழைய படம் ஒன்றில் ‘கன்னி வாடி’ என்கிற ஊர்ப்பெயர் வருவதுடன் அந்த ஊரையே காட்டுகிறார்கள். ஆனால் கேள்விப்பட்ட விவரங்கள் காட்சி வர்ணனை அடிப்படையில் எங்கள் கன்னி வாடியோ அல்லது திண்டுக்கல் மாவட்ட அப்பிய நாயக்கர் கன்னிவாடியோ அல்ல அது. சேலத்துக்குப் பக்கத்தில் எதோ ஒரு ஊரை கன்னி வாடி என்று காட்டியிருக்கிறார்கள்.

என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம்,காளி என்.ரத்தினம். டி.எஸ்.துரைசாமி, டி.ஆர்.ராமச்சந்திரன்என்கிற நகைச்சுவைக் காவியர்களோடு சி.டி.ராஜகாந்தமும் நடித்த படம்.ராஜ காந்தம்தான் கன்னிவாடிக்காரி. சௌ சௌ என்கிற படம்:அதாவது மிக்சர் என்கிற அர்த்தத்தில். பிளாக் மார்கெட், விடாக்கண்டன் கொடாக் கண்டன் ஆகிய பார்ட்டுகளும் அதே படத்தில் உண்டு. ஒரு படம் மூன்று கதை கான்செப்ட்.

சைக்கிள் ஓட்டத் தெரியாத துரைசாமி கன்னி வாடிக்குப் பெண் பார்க்கப் போவது சைக்கிளில். கன்னீ வாடி! என்கிற பெயரே காளி என்.ரத்தினத்தை ஈர்த்துவிட துரைசாமியை சைக்கிளில் வைத்து அந்த ஊருக்குத் தள்ளிக்கொண்டே செல்கிறார். ஒரு சுண்டல் கிழவி மீது சைக்கிள் மோத சண்டையாகி தப்பிச்செல்லும் துரைசாமி பெண் வீட்டுக்குப் போய்விட தப்பிஓடி ஏரிக்கரை அருகில் ஊரின் பெயர்ப் பலகையைப் பார்க்கும் ரத்தினம் கன்னி வாடி, கன்னி வாடி என ராகம்போட்டு உச்சரித்துக்கொண்டு அங்கே தண்ணீருக்கு வரும் ராஜகாந்தத்தை ஓரக் கண்ணால் பார்க்கிறார்.

ராஜகாந்தம் தலைமையில் கும்பல் மொத்தமாக ரத்தினத்தை மொத்த அவர் தப்பித்து வந்து சேரும் இடம் பெண் பார்க்கும் வீடு.... இப்படியாக அவர்களது சைக்கிள் பயணம் முடிகிறது.

வாழ்வின் திசைப் போக்கை மாற்றிய மறக்க இயலாத இடங்களில் ஒன்றான பெங்களூர் செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் நான் அவரைச் சந்திக்க நேர்ந்தது. கெழுதகை அண்ணார் விஜயன் விஜயன் மூலமாக அறிமுகமான மறு நொடியில் என் ஊர்ப் பெயரை விசாரித்ததும் ‘கண்களில் காட்சிகளே விரியும்படி ஏராளமான தகவல்களுடன்’ இதைப் பகிர்ந்துகொண்டவர் விட்டல் ராவ்.

அவரது ‘நதி மூலம்’ நாவலை இன்னொரு முறை படிக்க ஆசைப் படுகிறேன். கிடைத்தால் சௌ சௌ படத்தினையும் பார்த்திட வேண்டும்.

Saturday, June 4, 2011

நிலா நாற்பது - 16

நித்யம் தரித்து
மரித்த பின்னாலும்
பொழிவிற் சோராது
வான் மசிக் குடுவை.

ராம லீலா மைதானம்- ஊழல் விரோதம்: சூழல் மிக வினோதம்



04.06.20011 .கர வருடம் வைகாசி இருபத்தொன்றாம் நாள் திரிதியை திதியில் தில்லி ராம லீலா மைதானத்தில் ‘ஊழலுக்கு எதிரான’ தனது உண்ணா விரதத்தைத் தொடங்கியிருக்கிறார் யோகா குரு ராம்தேவ்.

வீட்டில் எனது நாட்காட்டியிலும் கிணறு வாஸ்துக்கு இது நல்ல நாள் என்றே போட்டிருக்கிறது. ஊழல் தூர் வாரப் பட்டு நல்ல கிணத்துத் தண்ணியாக சுத்தமாக எல்லோருக்கும் எல்லாமும் பகிரக் கிடைத்தால்தான் எத்தனை மகிழ்ச்சி.

புகழுக்காக அவர் இதைச் செய்கிறார் என்று நாம் இதைக் கொச்சைப் படுத்திவிடக் கூடாது. புகழுக்காக பட்டினி கிடந்து ஒருவர் நோன்பு நோற்கத் தயாராவார் என நான் நம்பவில்லை. மிகச் சில நாட்கள் முன்னதாக ஹசாரே காட்டிய வழியில் யோகா குருவும் இந்த உண்ணா நோன்புக்குத் தயாராகிவிட்டார்.

நாடு முழுக்கவும் பல்வேறு இடங்களில் கிளைகள் உருவாகி பல பெரு சிறு நகரங்களிலும் பலர் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்கள். கிளைகள் என்றதும் இதை வங்கிக் கிளை போன்று குறிப்பிட்டுவிட்டேனோ என யாரும் கருதவேண்டாம். கிளை என்றால் உறவு என்ற பொருளில் இந்தியாவின் ஆன்மீக மற்றும் ஆத்மீக பந்தத்தினால்தான் அவருக்கு இத்தகைய வரவேற்பு.

செய்தி கொண்டு செல்லும் அல்லது செலுத்தும் ஊடகங்களால் இந்த உடனடிப் பரவலும் சாத்தியப்பட்டிருக்கிறது. ‘அவர் கூறுவது நியாயம்தான்’ என்று செய்தித் தொடர்பு அமைச்சரே கூறும் போது செய்தி மிகப் பெரும் வலிமையுடையதாக மாறுகிறது.

முதற்கண் ராம் தேவினை மறுத்துப் பேச இங்கு யாருக்கும் நாவில்லை என்பதாக சூழல் இருக்கிறது.அன்னா ஹசாரேவும் முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு தார்மீக ஆதரவைத் தருவார்.

ராம் தேவ், ராம் லீலா மைதானம் ஆகிய பதங்களின் தொடர்ச்சியாக காந்தி சொன்ன ராம ராஜ்யம் என்கிற பதப்பிரயோகமும் நமக்கு ஞாபகம் வருகிறது. ஆனால் பிரயோகம் வேறு கிடைக்கிற யோகம் வேறு.

‘ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஒழியுங்கள்’ என்று அவர் சொன்னதாகவும் அதை அதிகாரத்தில் உள்ளவர்கள் மறுத்திருப்பதாகவும் செய்தி படித்தேன். ராம் தேவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் நான் இந்த நிமிடத்தைய (குடும்பக்) கையிருப்பான எண்ணாயிரத்து நானூறு ரூபாயில் எட்டாயிரத்தை இழந்து வெறும் நானூறு ரூபாய்க் காரன் ஆகிவிடுவேன்.

ஏ.டி.எம் மெஷின்களுக்கும் இப்போது ’புழங்கும்’(அ) புழுங்கும் சூழலுக்கும் ராம் தேவ்வின் கோரிக்கையைப் புரியவைக்க முடியாது. அவரது குழந்தைக் காலத்தைப் போல காலணா ஓட்டைக் காசும் நாலணா எட்டணாக்களுமாகப் புழங்கினால் ஊழல் ஒழிந்துவிடும் என அவர் நினைக்கிறாரா தெரியவில்லை. முப்பது வெள்ளிக் காசுகளுக்கு இறைத் தூதர்களைக் காட்டிக் கொடுக்க ஆரம்பித்து ஆயிற்று ஆயிரங்களின் காலம்.

ஆனால், ராம் தேவின் இந்தக் கோரிக்கையில் உள்ள அறியாமையையே அவரது நேர்மையாகவும் லட்சிய வாதமாகவும் பார்க்கிறேன். லட்சிய வாதங்களுக்கான மரணச் சங்கொலி ஏற்கெனவே கேட்டாகிவிட்டது எனப் பேசப் படும் சூழலில் இப்படி ஒருவர் ஆரம்பித்து வைப்பதும் அதை அடுத்து நாடேகமும் சிலசில சலனங்கள் ஏற்படுவதும் மகிழ்ச்சியளிக்கிறது.

’உங்கள் தரப்பில் நியாயம் இருக்கிறது. அது பரிசீலிக்கத் தக்கதாய் இருக்கிறது.உண்ணா விரதத்தைக் கைவிடுங்கள் என அரசு கபில் சிபல் மூலமாகக் கேட்டுக்கொண்டாகிவிட்டது. அப்புறமும் பலபேர்.

வட இந்திய ஊடகங்கள் இந்த நிகழ்ச்சியை குத்தகைக்கு எடுக்கப் போகின்றன என்பது லட்சக்கணக்கான பேர்கள் பங்கெடுப்பதற்கான திருவிழா ஏற்பாட்டிலிருந்து தெரியவருகிறது.

ஹிந்தித் திரைப்பட நட்சத்திரங்களின் ஆதரவு இதற்குக் கிடைக்காதென்பது பேட்டிகளால் தெரிகிறது. பெயர் கூட மாற்றப் படாத ஒரே படத்தில் எத்தனை தடவை நடிப்பது என்கிற எண்ணம் அவர்களுக்கு இருக்குமாயிருக்கும்.

ஊழல் ஒழிப்புப் போராட்டத்திற்கு தார்மீக அல்லது மானசீக ஆதரவை அளிப்பது நமது கடமை.

எவ்வளவெவ்வளவோ மாற்றங்களை சிறுகச் சிறுகக் கொண்டு வரவேண்டியிருக்கிறது. மனவலிமையும் மன நேர்மையும் பொதுப் புத்தியில் உறைய வேண்டிய கடப்பாட்டை அது கோரி நிற்கிறது.

சத்தியம் வெல்லும் என்பதற்காக சடங்குகளில் பங்கேற்காமல் நிர்விகல்பமாய் இருக்கமுடியாது. ராம் தேவ் தனது இந்தப் போராட்டத்தை பத்து நாட்களுக்கும் மேலாகக் கொண்டு செல்வார் என நம்புகிறேன். யோகங்களைப் பற்றி நான் கருதுகிற யூகங்களை ஒட்டி இதைச் சொல்லுகிறேன்.

Wednesday, June 1, 2011

ஒரு கவிதையும் சமச்சீர் கல்வியும்

பள்ளிக் குழந்தைகள் எல்லாம் பதினைந்து நாள் உபரி விடுமுறையில் சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்தப் பதினைந்து நாளை அனுபவிக்க விடாமல் டியூசனுக்கோ அல்லது ‘தங்கள் நிலையில் உத்தரவாதமாகவும் உறுதியாகவும் இருக்கிற பள்ளிக்கோ போகும் பிள்ளைகள் தங்கள் வரலாற்றின் பலனை அனுபவிக்கிறார்கள்.

சிலபல கோடிகளை செலவு செய்து புதிய (அல்லது பழைய ) புத்தகங்கள் அச்சிடப் பட்டுக்கொண்டிருக்கின்றன. ’எனது கவிதயை வேண்டுமானால் நீக்கிவிட்டு பாடத்திட்டத்தை அமலாக்குங்கள் ‘ எனக் கருணாநிதி கேட்டுக்கொண்டார். அப்படியாயிருப்பினும் புதிதாக அச்சிட்டுத்தான் ஆகவேண்டும். தாளைக் கிழித்துவிட்டு பாடப் புத்தகத்தை அப்படியே தொடரும் கல்வி முறை இன்னும் அமலுக்கு வரவில்லை.

ஒன்று விளங்குகிறது.(நீண்ட காலப் பார்வையற்று) தேவையற்ற செலவுகளுக்கு வழி வைப்பதாகவும், தேவையான செலவுகளைச் செய்யாமல் விடுவதாகவும்தான் நமது அரசியல் மற்றும் கல்விக்கான பிணைப்புகள் இருக்கின்றன.
.
;இன்றைய செய்தி நாளைய வரலாறு ’ என்பதைப் புரிந்துகொண்ட தி.மு.க அவர்கலுக்கு ஏற்ற பாடத்திட்டத்தை முயன்றிருக்கக் கூடும் என்பதும் அச்சங்களில் ஒன்றுதான். ஆனால் ஜெயலலிதா நேற்றுத் தெரிவித்துவிட்டார்... கவிதை காரணமல்ல. ஒட்டு மொத்த கல்வியியல் நோக்கத்தின் அடிப்படையில்தான் பாடத்திட்டம் மாறுகிறது என.

தனியார் கல்விப் புலத்தில் ஃபீஸ்கள் மற்றும் பீசுகளில் அவர் தலையிடப் போவதில்லை என்பதையும் தெரிவித்திருக்கிறார். பெற்றோர்கள் அரசுப் பள்ளிக் கல்வியைப் புறக்கணிக்கிற நிலைப் பாட்டை எடுத்தபின் . தாங்கள் போய்ச்சேர்ந்த நிறுவங்களிடம் ‘காசைக் குறை’ என்று சண்டை போடுவது என்ன வித நியாயம் எனத் தெரியவில்லை.( சும்மா சொல்லிக் கொடுக்க அவன் என்ன மாமனா மச்சானா....)

யோசித்துப் பாருங்கள் அதிகமாகப் பத்தும் இருபதும் ஆயிரங்களாக சம்பளம் வாங்கும் ஆசிரியர்களிடம் பிள்ளைகளைப் படிக்கப் போடாமல் நான்கும் ஐந்தும் ஆயிரங்களாக சம்பளம் வாங்கும் பள்ளிகளில் ‘நீங்கள் காசும் கொடுத்து’ப் படிக்கப் போடுகிறீர்கள் என்றால்.... இடையில் நடப்பதுதான் என்ன.

அரசுப் பள்ளியில் படிப்போருக்கு அறுபது சதம் ஒதுக்கீடு என்பது மாதிரி சட்டம் வந்தால் கூட ஒப்புக்கொள்ளலாம் என்பது மாதிரி தோன்றுகிறது.
அனைவருக்கும் கல்வி இலவசம், தனியார் பள்ளிகளுக்கு அனுமதி இல்லை,மந்திரி மகனும் கூலித் தொழிலாளி மகனும் கலெக்டர் மகளும் ஒரே பள்ளிக்கூடம் (உடைகள் உட்பட அப்போது அரசின் பொறுப்புக்கு வந்துவிடக்கூடும்).

இந்த நிலைமை வராமல் சமச்சீர் கல்வி என்பது சாத்தியமல்ல என்றுதான் நினைக்கிறேன். சமச் சீர் என்பது நமது பெயரிடும் ஆர்வத்தால் உச்சரிக்கப்படுகிறது.

‘சமன் செய்து சீர் தூக்கி அங்கே ஒருபால் கோடாமை கோடி பெறும்.’

ஆரோக்கியமான கல்வி மறுக்கப்படுகிற கோட்டுவிளிம்பில்தான் எத்தனை கோடிப்பேர்.

Tuesday, May 17, 2011

விதானம்.... நிதானம்.

தமிழக சட்ட சபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாறுகிறது. எங்கிருந்து இயங்குகிறது என்பது எப்போதும் சங்கதி அல்ல. எப்படி இயங்குகிறது என்பதே சங்கதி.

ஏராளம் பொருட் செலவில் அண்ணா சாலையில் தன்னளவில் விசாலமாகவும் பொதுப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் கட்டப்பட்டிருந்த (அல்லது இடப்பட்டிருந்த) அவை பயன்பாட்டில் இல்லாது போகிறது. ஒரு இரண்டு ஆண்டுக்குள்ளாக இந்தியப் பணத்தில் அதற்கேற்பட்ட செலவினங்கள் யாவும் இப்போது வெட்டியாகக் கருதப்படுகிற சூழல் வந்துவிட்டது. இத்தனைக்கும் அப்படியான இட மாற்றத்துக்கு தி.மு.க தயாரானபோது இருந்ததென்னவோ மைனாரிட்டி அரசுதான்.

இதுபோன்ற அலாதியான செலவினங்களின் போதாவது எதிர்க்கட்சிகள் புதிர்க்கட்சிகள் உட்பட பலரது தரப்பிலும் ஆதரவைக் கோருவது மட்டுமே சரி என்று படுகிறது.

இல்லாவிட்டால் மிகத் தொலைநோக்கான காரியங்களில் எல்லாம் அரசாங்கங்கள் அவசரம் காட்டவேண்டியதில்லை.

 இங்கு சட்டசபை என்பது குறியீடு மட்டுமே.

Sunday, May 15, 2011

ஆரூர்த் தேரும் அரங்கன் கோபுரமும்

தமிழகத்தின் புதிய - அல்லது பழைய - முதலமைச்சராக ஜெயலலிதா நாளை மறுபடியும் பதவியேற்கிறார்.

எதிர்க் கட்சித் தலைவராக விஜய காந்த்.

 ஒருவேளை கருணா நிதியே வந்திருக்கக் கூடியதுதான். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னனாக இருந்தவர் ஏமாறா மன்னனாக ‘ஆற்ற’ இயலாத போய்விட்டது. ஒருவேளை குடியாட்சி மன்னராக இருந்து செய்து கொள்ள வேண்டிய வசதி வாய்ப்புகளை போதுமான அளவு பெருக்கிக்கொண்டாரோ என்னவோ? மீண்டும் ஆட்சிக் கட்டிலில் இல்லை என்பது இழப்புதான்.

இந்தச் சரிவு தி.மு.கழகத்தை ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் பின்னகர்த்தியிருக்கிறது. வெற்றி வேட்பாளர்களின் எண்ணிக்கையை மனதில் வைத்து இதை மொழிகிறேன். ஒரு விதத்தில் ஜெயலலிதாவின் சேவல் கூவிய காலத்தின் எண்ணிக்கையை நினைவூட்டுகிற மாதிரி இன்று உதய சூரியன் வந்திருக்கிறது.

ராஜீவின் மரணம்- இந்திரா காந்தி அல்லது மூப்பனாருடன் கூட்டு என்பது மாதிரி சில தருணங்களில் அ.தி.மு.க அல்லது தி.மு.க இரண்டுக்குமே  இப்படியான ‘பெருக்கித் துடைக்கப்பட்ட வீழ்ச்சிகள்’ கிடைத்துத்தான் இருக்கின்றன.

ஆனால் இம்முறை மிகுதியானதும் வலிவானதும் என நம்பப்பட்ட கூட்டணிகள்; சாதீயக் கட்சிகளுடன் கூட்டு என பலவிதப்பட்ட வியூகங்களைத் தாண்டி பெற்றுக்கொண்ட இந்தத் தோல்வி கருணா நிதி உள்ளிட்ட கழகத்தினரை கடுமையாக சிந்திக்கவைக்கும்.

எதிர்க் கட்சிக்குக் கூட லாயக்கில்லாத  கழகத்தின் ‘ இம் முடிவு’ புதிய தெம்பை ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்துக்கும் தந்திருக்கும். இந்தத் தெம்புடன் தரப்பட்ட மற்ற உள்ளுறைச் சங்கதிகளையும் கணக்கில் கொண்டு அவர்கள் பணிபுரிவது அவசியம்.

உள்ளூரில் நின்று வென்ற இரு தலைவர்களையும் வாழ்த்தி திரு. வாலி அவர்கள் பாட்டு எழுதினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய சுகமாக இருக்கிறது.

கருணா நிதி;

 நிலையில்
நிற்கின்ற தேரும்
அதன் பருவத்தில்
ஓடிவரும் என்பதற்கு
நீ எடுத்துக்காட்டு. அதை
உலகத்திற்கு
எடுத்துக்காட்டு.


ஜெயலலிதா:

உறங்குகிறாய் என
உலகம்
உன்னியிருந்தது
அறி துயிலாகும்.
உன் இமையை
விரித்துவிட்டால்
ஆதி சேடனும்
ஆகிடுவான் உன்
பாதி சீடன்.

Tuesday, May 3, 2011

முள்ளை முள்ளால்...

முள்ளை முள்ளால் எடுப்பது பற்றி
முடிவு செய்து புதிதாக
முள்ளை உருவாக்கியது
முன்பொரு நாள்.

முள்ளாகப் பயன்பட்ட
முள்ளானது
பின்
தனக்கென முள் வனம்
வளர்க்கத் தொடங்கி
முதலாம் முள் மனத்தைப்
பதம் பார்க்கிறது.

வளர்த்த முள்ளால்
வலிகண்ட வன் ஆளுமை
‘முள்ளைக் களைவது’
பற்றி
அகிலத்துக்குப் பறை சாற்றுகிறது.

பின்
புதிய வரலாற்றின் பதிவு ஒன்றைப்
பொன் எழுத்துக்களால்
அச்சடிக்கும் முயற்சியில்
முள்ளைக் களைந்துவிட்டு
மார் தட்டுகிறது.

முனை மழுங்கிய முள்ளுக்கு
ஈமச் சடங்கு செய்ய
தாவர ரீதியான முறைமைகள்
செவ்வனே முடிக்கப்பட்டதாக
அறிவித்துவிட்டு
முள்ளைத் துக்கி
நீர் நிலையில் போடுகிறது.

சடலம் கடித்த மீன்களைப்
பற்றி
புதிதாகக் கவலை
கொள்கிறது அகிலம்.

மீன்களுக்கும் முட்கள்
உண்டு.