Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, September 17, 2011

உள் ஆட்சி

இதுகாறும் நடைபெற்றிராத அளவில் இம்முறை தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில்  சுவாரசியமும் ஜனத் தன்மையும் கொப்பளிக்க இருக்கிறது. ‘ டெரிட்டோரியல்’ என்கிற ஆங்கிலப் பதத்திற்கு, ‘தற் புல வரைவு’ என்கிற அளவிற்கு பெயர்ப்பியல் ரீதியாக நெருங்கி வந்துவிட்டேன். இந்தத் தேர்தல் முடிவதற்குள் ஆகச் சரியான - நிகர்த்த சொல் நானல்லாவிட்டாலும்  நண்பர்கள் மூலமாகக் கிடைத்துவிடும் என நம்புகிறேன். (உணர்ச்சிக்கான உரிமையான சொல்லோடு இன்னும் நெருங்கிப் பயணிக்க வேண்டும்.)

தி.மு.க காங்கிரசைக் கழட்டிவிட்டுவிட்டது.(தற்போதைய கைதுகளை மிசா போல உணர்கிறேன் என்றோ அல்லது ஸ்பெக்ட்ரம் அரசியல் ரீதியானது என்று சொல்கிற கணங்களில் - நீ எதிரியா நண்பனா ? ’என்கிற தொனி தவிர்க்க இயலாதது). ஆக காங்கிரஸ் கழலாமலேயே கழன்று கொண்டுவிட்டது.

காங். தனித்துப் போட்டி.

ம.தி.மு.க தனித்துப்போட்டி. -

 ம.தி.மு.க கடைசியாக நடந்த தேர்தலைப் புறக்கணித்ததை  ஒட்டி இது கட்சியா இயக்கமா என்கிற கேள்வியை அனைவருக்கும் விளைத்து விட்டது. அது கட்சிதான் என்பதை வை.கோ நிரூபித்திருக்கிறார்.( தமிழ் நாட்டின் நுண்மைக் கணக்கில்- எனது யூகக் கணக்குக் கூட்டலில்  இது இரண்டு அல்லது இரண்டரை சதவீத இடங்களைக் கைப்பற்றக்கூடும்).

எதிர்க் கட்சியான தே.மு.தி.க தனித்துப் போட்டியிடுகிற சூழலை அ.தி.மு.க ஏற்படுத்தி வருகிறது.. சமச்சீருக்கு வாய்ப்பில்லை. (சமச்சீர்  பம்மாத்தினைஆதரித்து ஒரு சாத்வீகக் குரலும் எழுப்பாது  வாளாவிருந்த அக்கட்சி இப்போது என்ன செய்யப்போகிறது என்பது சோழி உருட்டல்களின் போது தெரிய வரும்)..

தே.மு.தி.க  தனித்துப் போட்டியிடுவது தன்னளவிலான பரிசீலனாச் செயற்பாடுகளுக்கு - வருங்கால வளமை அல்லது வறுமையைக் கண்டடைய அக்கட்சிக்கு உபயோகப் படக்கூடும்..

இரண்டு ‘கழகக்’ கட்சிகளுடன் உறவு வைத்ததற்காக மன்னிப்புக் கோரிய பா.ம.க தனி.

 வலதும் இடதும் தனித்தனி. (கம்யூனிஸ்ட் கட்சியில் மெம்மராவதை விடச் சுலபம் வார்டு மெம்பராவது)

புலிகள். ,சலங்கைகள், புதிய தமிழகங்கள் - ஒதுக்கீடுகள்.....


(தமிழக மேயர் வேட்பாளர் பட்டியலில் அ.தி.மு.க சார்பில் விழுக்காட்டு ரீதியில் அதிக பெண்களைப் பார்த்தது பெருமிதமாக இருந்தது)

இந்தத் தேர்தல் அதி நிச்சயமாகவும் சிறப்பாகத்தான் இருக்கும் போல இருக்கிறது பல கட்சிகளுக்கு தம்மை உணரும் வாய்ப்பு.

மக்களுக்கு இன்னும் அதிக உரிமையியல் வாய்ப்பு.

குறிப்பாக அகில இந்தியக் கட்சிகளான காங்கிரஸ்,  பி.ஜே.பி, பகுஜன் சமாஜ் பார்ட்டி. ஜனதா, ஜனதா தளம்.... நான்... நீ... உங்க அப்பா... எங்க அப்பா...

தாள முடியாவிட்டாலும் இது அவசியம்தான்.

துண்டாடத் தெரிவது கூட துண்டாகத் தெரிந்தால்தான் இருப்பின் கதி.

Sunday, August 21, 2011

உண்ணா ஹசாரே

அன்னா மீண்டும் உண்ணா விரதத்தைத் தொடங்கிவிட்டார். ராம் லீலா மைதானத்தில். ஆர்வ வழிப்பட்ட ஆதுரங்கள் அவர் மீது மலரெனத் தூவப்பட்டுவிட்டன.

தியாகியை அடைப்பதற்கென்று தனி ஜெயில்கள் உருவாக்க முடியாது என்கிற எளிய உண்மையைக் கூட மனம் ஏற்றுக்கொள்ளாமல் ‘இவரைப் போய் திகாரில் அடைப்பதா?’ என்கிற கேள்விகள் எல்லாம் எழுந்தாயிற்று. சிறையில் புனிதர்களும் குற்றவாளிகளும் மனிதர்களும் (சமயங்களில் குற்றமற்றவர்களும்) அடைபடுவதால்தான் சிறை இந்த அமைப்பின் தவிர்க்க இயலாத அம்சம் ஆகிறது.

ஆட்சியில் இருந்த காலத்தில் லோக்பாலை அமல் படுத்தாதவர்கள் எல்லாம் இன்று அன்னாவுக்குக் குரல் கொடுக்கிறார்கள். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் சட்டம் போலவே இதிலும் வெகுபேர் விரும்பாத நுண் அமைவுகள் பலது இருக்கக் கூடுமெனக் கருதுகிறேன். வெகுபேர் என்பதை அரசியலாளர்கள் மற்றும் மக்கள் என இருதரப்பிலுமாகக் குறிப்பிடுகிறேன்.

அன்னா கேட்டது போலவே கொடுத்துவிட்டு அதை எண்ணி எண்பத்தியிரெண்டு மணித்தியாலத்துள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள அரசியலாளருக்கு இயலாததல்ல.

ஆகவே அதனினும் கடந்து அன்னாவின் கோரிக்கைகளில் எதேனும் வலிமை இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

மன் மோகன் மவுன மோகனாக இருந்தாலும் அவ்வப்போது பெரும் கருத்துகளைச் சொல்கிறார். அறப்போர்களின் காலம் முடிவுற்றுவிட்டது என்பது போன்ற செய்திதான் சமீபத்தில் அவர் தந்தது.கொரிக்கை நிமித்தமான  பட்டினி இறப்புகள் என்னமாதிரியான ஆவேசம் அல்லது விளைச்சலைத் தோற்றுவிக்கும் என கற்பனை செய்யுமளவு எனக்கு மனத் திராணி இல்லை.

நாடெங்கிலும் பந்தலிட்டுப் பட்டினியில் அமர்ந்திருக்கிற அன்னாரின் சக போராளிகள் யாரேனும் இறந்துவிடக்கூடாது என்பதே விருப்பமாயிருக்கிறது.

Thursday, August 4, 2011

சதா இக்கட்டிலிருந்து சதானந்தத்துக்கு...

இன்று முதல் கர்நாடகத்தில் புதிய முதலமைச்சரின் கண்பார்வையில் வாழப்போகிறேன். சதானந்த கவுடா பி.ஜே.பிக்காரர்களால் ஏகமனதாக அல்லாமல் ஒரு வழியாகத் தேர்வு பெற்றிருக்கிறார்.

அரியணை ஏறிய நாள் முதலாக அல்லலுற்றும் இக்கட்டுகளின் பாற்பட்டும் ஆட்சி நடத்திவந்த எடியூரப்பாவுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. அவர் விரும்பாத விடுதலை. அண்டை மாநிலமான தமிழ் நாட்டின் ஜெயலலிதா போல ஆறு மாதத்தில் மீண்டும் தானே முடி சூடும் கனவும் எடியூரப்பாவுக்கு இருக்கிறது. அது முச்சூடும் பலிக்குமா எனத் தெரியவில்லை.

தென்னகத்தில் முதன்முதலாக அமைந்த பி.ஜே.பி ஆட்சியை இப்படி அவர் ஆக்கிவைத்தது அந்தக் கட்சிக்கு பாதகம்தான். கர்நாடக முதலமைச்சர் பட்டியலில் ரெட்டி,ஜாட்டி, மொய்லி,பட்டீல்,ராவ்.சிங்.ஹெக்டே,கவுடா, அப்பா.அய்யா,சாமி.... என வினோதம் பலவுண்டு.இப்போது சதானந்த கவுடா. குமாரசாமி கவுடரின் சத்தத்தை இந்த ஏற்பாடு குறைக்குமா எனத் தெரியவில்லை.

மிகச் சிலர் எதிர்பார்த்தது போல சோபா முதலமைச்சர் ஆகவில்லை. அல்லது ஆகமுடியவில்லை. தென்னகத்தார் ஒரு பெண்ணின் தலைமைய அவ்வளவு எளிதில் ஏற்பார்களா தெரியவில்லை. விடுதலைக்குப் பின் அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. அனேகமாக விடுதலைப் பாரதத் தென்னகத்தின் முதல் நூற்றாண்டின் ஏக பெண் முதல்வர் ஜெயலலிதா மட்டுமேயாக அமைந்துவிடுதல் கூடும்.

அனேக வருத்தங்களில் ஒன்றான இதை பிரத்யேக வருத்தம் எனக் கூறமுடியுமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

Tuesday, May 17, 2011

விதானம்.... நிதானம்.

தமிழக சட்ட சபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாறுகிறது. எங்கிருந்து இயங்குகிறது என்பது எப்போதும் சங்கதி அல்ல. எப்படி இயங்குகிறது என்பதே சங்கதி.

ஏராளம் பொருட் செலவில் அண்ணா சாலையில் தன்னளவில் விசாலமாகவும் பொதுப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் கட்டப்பட்டிருந்த (அல்லது இடப்பட்டிருந்த) அவை பயன்பாட்டில் இல்லாது போகிறது. ஒரு இரண்டு ஆண்டுக்குள்ளாக இந்தியப் பணத்தில் அதற்கேற்பட்ட செலவினங்கள் யாவும் இப்போது வெட்டியாகக் கருதப்படுகிற சூழல் வந்துவிட்டது. இத்தனைக்கும் அப்படியான இட மாற்றத்துக்கு தி.மு.க தயாரானபோது இருந்ததென்னவோ மைனாரிட்டி அரசுதான்.

இதுபோன்ற அலாதியான செலவினங்களின் போதாவது எதிர்க்கட்சிகள் புதிர்க்கட்சிகள் உட்பட பலரது தரப்பிலும் ஆதரவைக் கோருவது மட்டுமே சரி என்று படுகிறது.

இல்லாவிட்டால் மிகத் தொலைநோக்கான காரியங்களில் எல்லாம் அரசாங்கங்கள் அவசரம் காட்டவேண்டியதில்லை.

 இங்கு சட்டசபை என்பது குறியீடு மட்டுமே.

Friday, April 1, 2011

தர்ம அடி... சாரி... சாரி.... தர்ம புரி!

 தர்ம புரியில் வேனில் வைத்து வேட்பாளரை விஜயகாந்த் அடித்ததாக செய்தியும் (தொலைக்)காட்சியும் கிடைத்தது. மறு மறு ஒளிபரப்புகளில் அவர் அடித்துக்குமுறுவதுபோல அக்காட்சி சித்தரிக்கப்படுகிறது. அது தவிரவும் அடித்து உதைப்பு, அடித்துத் துவைப்பு என அளவுக்கு மீறிய வார்த்தைகள் பிரயோகிக்கப் படுகின்றன. இக்காட்சி அனேகமாக ‘’கொல பண்றாங்கப்பா! அய்யோ கொல்றாங்களே!’’ அளவுக்கு ஒளிபரப்பப்படலாம் என்பது என் கணிப்பு.

நல்லவேலையாக பாண்டியன் என்று விஜயகாந்த்தால் அழைக்கப்பட்ட பாஸ்கரன் விஜயகாந்த்தை திருப்பி அடிக்காததன் மூலம் ராசாபாசம் பாதி மட்டுப்பட்டுவிட்டது.

மதுரைக்காரர் என்கிற அளவில் ‘பாண்டியன்’ என்கிற பெயர் ரத்தத்திலும் சத்தத்திலும் ஊறியதாகும். ஒருவேளை பாஸ்கரனை தனிச்சந்திப்புகளில் விஜயகாந்த் ‘பாண்டியன்’ என்றுதான் அழைத்துக்கொண்டிருந்தாரோ என்னவோ?... பாண்டியன் தவறு செய்கிற இடத்தில் அல்லது சரியே செய்கிற பட்சத்தில் கூட செல்லமாக அவ்வப்போது தட்டுவதை விஜயகாந்த் வழக்கமாகக் கொண்டிருக்கலாம். அடித்த கையும் உதைத்த காலும் சும்மா இருக்குமா?

கிரிகெட் ஆட்டங்களில் ஸ்டம்பு கேமரா இருப்பதுபோல வேனின் பிரச்சாரச் செவ்வகத்தை ஒட்டி ஒரு கேமரா இருந்தால்தான் உண்மை நிலை விளங்கும். செய்திகளின் போது நிஜமான வேகத்தில் ஒளிபரப்பவேண்டுமே தவிர ரீ-ப்ளே, ஃப்ளர்ப், மிகை இயக்கம், தாழ் இயக்கம், மிசைக்குரல் போன்ற சினிமா சார்ந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்தி வெளியிடுவது தவிர்க்கப்படவேண்டும்.
எனக்கென்னவோ ‘ச்சே பேசாம இருடா... ’ என்கிற தொனொயில் விஜயகாந்த் வேட்பாளரின் வலதுதோள் பட்டையை ஒன்று அல்லது இரண்டு முறை உந்தித் தள்ளியதுமாதிரித்தான் பட்டது.

பாஸ்கரனே இதுபற்றி முறையிடாத போது நானும் சொல்வதற்கு ஒன்றுமில்லைதான். ஆனால் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்குத்தான் தெரியும் உண்மை எதுவென்று.

கட்சிக்காரர்களை அடிக்கும் உரிமை எடுத்துக்கொள்கிற அளவில் விஜயகாந்த் இருப்பாரேயாகில்  அவர் மக்களை என்னவெல்லாம் செய்வார் என நினைக்கும்போது திகிலாகத்தான் இருக்கிறது. அடிப்படைச் செயல்பாடுகள் இயல்பூக்கம் உயிரியல்பு ஆகியவற்றின் ஆதாரத்திலேயே விஜயகாந்த் இப்படி ஒரு ஆளாக இருப்பாராகில் மக்களாகிய நாம் சொல்லிவிடவேண்டியதுதான்.

தமிழ்ல நமக்குப் பிடிக்காத வார்த்தை. ‘மன்னிப்பு!’ ஹ்ஹா....ங்.

Wednesday, March 9, 2011

தொகுதி மாற்றங்களும் சில ஏமாற்றங்களும்

தி.மு.க தரப்பு தொகுதிப்பங்கீடு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட பாவனையில் காட்சியளிக்கிறது. அரசு கட்டிலில் அமர்ந்து அவர்கள் தனிப் பெரும்பான்மை எட்டவேண்டுமானால் கிட்டத்தட்ட போட்டியிடுகிற அத்தனை இடங்களிலுமே வென்றாக வேண்டும் என்கிற அளவு நிலையில் தி.மு.க வின் ஒதுக்கீடு அமைந்திருக்கிறது.
முதலில் மிகத் துரிதமாகக் காட்சியளித்த அ.தி.மு.க இப்போது சுணக்கம் காட்டுகிறது. விரைவில் அது தனது பங்கீட்டை முடிக்கவேண்டுமெனில் கம்யூனிஸ்டுகள் மற்றும் ம.தி.மு.கவுடன் இணக்கம் காட்டவேண்டும். மூன்றுக்கும் தலா பத்துக்கும் குறைவாக நல்குதலே ஜெயலிதாவுக்கு உவப்பானதாக இருக்கலாம். கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த அளவில் மார்க்சிஸ்டுகள் பெறுகிற அதே அளவை இந்திய கம்யூனிஸ்டுகள் பெறாவிட்டால் தத்துவார்த்த உளவியல் சிக்கலின் பாற்பட்ட தொய்வுக்கு அவர்கள் ஆளாவார்கள் என்றாலும் ஸ்திதிகதிகளை ஆலோசிக்கும்போது மார்க்சிஸ்டுகள் கூடுதலான இடத்தைப் பெற்றுவிடுவார்கள். மொத்தம் இருபத்தை ஐந்து சீட்டுகளுக்குள் இந்த இரண்டு கம்யூனிஸ்டுகளும் அடங்கிவிடும் என்கிற நிலையில் அடுத்து நிற்பது ம.தி.மு.க தான்.

ஏறக்குறைய அ.தி.மு.வின் கொள்கைப் பீரங்கியாகவும் விசுவாசியாகவுமே மாறிப்போய்விட்ட வை.கோவின் கட்சிக்கு எத்தனை சீட்டுகள் என்பது கேள்வி. மனதளவில் அவர் இருபதுக்குத் தயாராகிவிட்டார். இருபது ஆட்கள் இருக்கிறார்களா? என்பது அ.தி.மு.கவின் கேள்வியும் பெரும்பான்மைப் பொது மக்களின் கேலியுமாகும். தலைவன் மற்றும் தலைமை மட்டுமே இயக்கமாக மாறிவிடாது என்பதன் கனத்த உதாரணமாக ம.தி.மு.க இலங்குகிறது. அடிமாட்டு விலைக்கும் தோல்விலைக்கும் இடையில் ஒரு கணக்கைப் போட்டு பதினைந்து பதினாறு சீட்டுகளை வை.கோவுக்கு ஜெயலலிதா வழங்குவார் என நினைக்கிறேன்.

தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளின் மண்ணிலும் கால்பதித்து ஒரு புயலாய் ஒரு சுறாவளியாய் ஒரு சண்டமாருதமாய் அலை வீசி அடிக்கிற ஆற்றலும் உடற்றிறனும் தொண்டுள்ளமும் தொண்டை வளமும் அவருக்கு மட்டுமே உள்ளது என்பதால் ஜெயலலிதா அவர்மீது கருணை கொள்வார்  என நம்புகிறேன். இன்றைய (09.03.2011) தினமணியில் குறிப்பிட்டுள்ளது போல மூன்றாவது அணியும் அமைந்து தேர்தல் களத்தில் வகைதொகை இல்லாத  காட்சி மாற்றங்கள் பார்க்கக் கிடைக்காது என நம்புகிறேன். விஜயகாந்தை மட்டும் முழுக்க நம்பி மற்றவர்களையும் தன்னையும் ஒருசேர நட்டாற்றுக்கு ஜெயலலிதா இழுத்துக் கொள்ளமாட்டார்.

இப்போது தொகுதிப் பங்கீட்டில் உற்பத்தியாகப் போகும் இழுபறிக் குழப்பங்கள் என்னவென்றால் சீரமைக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப் பட்ட தொகுதி வரைபடங்கள்தான். அது தீவிரமான சர்ச்சைகள் ஊடல்கள் வட்டார ஆட்களின் மனமுறிதல்கள் ஆகியவற்றுக்குக் காரணமாக அமையப்போகிறது.

நான் நன்கறிந்த தொகுதி எங்கள் தொகுதியான வெள்ளகோவில், அந்தத் தொகுதி இந்தத் தேர்தலில் இல்லை. அத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் இப்போது தாராபுரத்திலும் போட்டியிட முடியாது அது ‘தனி’த் தொகுதி.
ஒட்டன் சத்திரத்தில் போட்டியிடலாமெனில் அது கொறடா சக்கரபாணியின் தொகுதி. மாவட்டச் செயலாளராகவும் இருக்கிற சாமிநாதன் ஒரு வேளை காங்கேயத்தில் போட்டியிடலாம் என்றால் அது விடியல் சேகருக்கான காங்கிரஸ் தொகுதியாக இருக்கிறது.

இப்போது சாமிநாதன் நெடுஞ்சாலைகளில் தனது தொகுதி எது எனத் தேடிக்கொண்டிருக்கிறார். விடியல் சேகர் தனது ‘அஸ்தமனம்’ நெருங்கிவிட்டதோ என அச்சப்பட்டிருக்கக் கூடும். தமிழக விரிவிலும் அளவிலும் இதுபோல எண்ணற்ற இக்கட்டுகள் பெருகியிருக்கும் நிலையில் எல்லாக் கட்சிகளுக்கும் சிக்கல்கள். இவை சிந்தனையை வேண்டுகிற சிக்கல்களாயிருப்பது மேலும் தலைவலி.

இந்தச் சிக்கலைத் தீர்ப்பதில் கருணாநிதியின் பலம் என்னவெனில் தங்கபாலு காங் தலைவராயிருப்பது. ஜெயலலிதாவின் பலம் என்னவெனில் ஜெயலலிதா ஜெயலலிதாவாக இருப்பது.

Monday, March 7, 2011

பெண்களின் தினச் சேதி

பெண்கள் தினத்துக்கு வாழ்த்துச் சொல்வது அத்தனை சம்பிரதாயகரமாகவும் அலுப்பூட்டுவதாகவும் (ஆணியல் அடிப்படையில் உட்குமைந்திருக்கிற காமத்தின் பாற்பட்டு ) குற்ற உணர்ச்சி தருவதாகவும் இருக்கிறது. ஆனாலும் சித்திரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டுவரும் நிலையில் பெண்கள் தினத்தைப் பற்றி எண்ணங்கொள்ளாமல் தள்ளிப்போடுவதும் சாத்தியமாகவில்லை.

பெண்கள் தினத்தை பெரும்பான்மை சனரஞ்சக இதழ்கள் ‘மகளிர் தினம்’ என விளிப்பதிலேயே தமது உள்ளங்கைக் கூட்டுக்குள் பெண்களை வைக்கவேண்டும் என்கிற மனோரீதி காணக்கிடைக்கிறது. இந்த ஆண்டின் பெண்கள் தினம் தமிழகத்தில் மிக அடுத்து தேர்தலைக் காணவுள்ள ஒரு நாளாக மலர்ந்துள்ளது(இதை ஒரு நாளின் மலர்ச்சியாகக் கொள்ளவேண்டுமேயல்லாமல் பெண் = மலர் என்கிற பாவனையில் கொள்ளவேண்டாம்).

அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.க போன்ற நூறுக்கும் அதிகமான இடங்களில் போட்டியிடும் இரு கட்சிகளை விட்டுவிட்டு அடுத்துள்ள நிலையில் உள்ள கட்சிகளைப் பாருங்கள். காங்கிரஸ்,பா.ம.க, வி.சி. தே.மு.தி.க,கம்யூனிஸ்டுகள், கொ.மு.க,த.மு.மு, ம.தி.மு.க இப்படி ஏகப்பட்ட கட்சிகள் போட்டியிடப் போகின்றன. அவை விகிதாசார அடிப்படையில் பெண்களுக்கு எத்தனை எத்தனை இடங்கள் ஒதுக்கப்போகிறார்கள் எனப் பாருங்கள்.

(தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த மூன்றாம் பாலினரான ரோஸ் மற்றும் கல்கி ஆகியோருக்கு ஒதுக்கப்படுமா என்பது மூன்றாம் பிரச்னை: மூன்றாம் பிரச்சினை என்பதாலேயே முக்கியத்துவமற்ற ஒன்றாக அது மாறிவிடாது.லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு விசா கூடக் கிடைக்கவில்லை என்பதை அவர் தனது பதிவில் கொந்தளித்திருக்கிறார்.)

பெண்களுக்கு அவர்கள் சதாகாலமும் மசோதா நிலைப் பேச்சிலேயே உள்ள 33.333333  சதவீத ஒதுக்கீட்டைச் செய்கிறார்களா எனப் பார்க்கவேண்டும். (மிகச் சிக்கலான பாகா எண் இந்த 100.) அப்படி ஒதுக்கீடு செய்யாத பட்சத்தில் பெண்கள் தேர்தலை- வாக்களிப்பைப் புறக்கணித்தால் எப்படி  இருக்கும்  என யோசித்துப்பார்க்கிறேன். எட்டாந் தேதி ஒன்றில் எட்டாத காரியங்களைப் பற்றிச் சிந்திக்கநேர்ந்துவிட்டது ஆண்மையப் பிழையாக இருக்காது என்றும் நம்புகிறேன்.

Monday, January 31, 2011

மாம்பழமா மாம்பழம்...

 நேற்று தில்லி சென்றதும் முதல்வர் பா.ம.க எங்களுடன்தான் கூட்டணி என்று அறிவித்ததும் அசந்துவிட்டேன். ஏனெனில் இழுபறி நிலையில் தமிழ் நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற இரண்டு கட்சிகள் பா.ம.க வும் தே.மு.தி.க வும்தான்.

ரகசியமாகப் பேச்சு வார்த்தைகள் முற்றடைந்து இறுதிக்கட்டம் வரை போனபின் தலைநகரில் முதல்வர் இப்படி அறிவித்திருக்கிறார் என நினைத்தேன். ஆனால் ஓரிரவில் (ஓரிரவு என்பது அண்ணாவால் மறக்க முடியாத ஒரு பதமாக தமிழுக்கு வந்து சேர்ந்தது. அவருக்கும் முன்னால் ஆண்டாள் அதைப் பிரயோகித்திருக்கிறார் என நினைக்கிறேன். ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்து...) கதை அதன் யதா ஸ்திதியை அடைந்து ராமதாஸ், ‘அப்படியெல்லாம் கிடையாதே’ எனத் தெரிவிக்க உடனே முதல்வரும் ‘ஆமா. அப்படியெல்லாம் கிடையாது’ என்று அடுத்த அறிவிப்பு கொடுத்துவிட்டார்.

முதல்வருக்கு தார்மீக அளவையில் ‘அவர்கள் எங்கள் கூட்டணி’ என்று கூற முன்னம்போட்ட ஒப்பந்தம் இருக்கிறது.மற்றபடி வேட்புமனு தாக்கல் செய்வது வரை ராமதாசை நம்பமுடியாது என்று அவருக்குத் தெரியாமல் இருக்காது.
மாம்பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு அன்னையைச்( சோனியா) சுற்றினால் ஆதாயகரமாக இருக்கும் என்று முதல்வர் மு.க நினைத்தார்.
மாம்பழத்துக்கு இவ்வளவு டிமாண்ட் இருந்தால்தான் அம்மா (ஜெ) வைச் சுற்றச் சரியாக இருக்கும் என்று ராமதாசும் நினைத்தார்.
எப்படியோ பா.ம.க வுக்கு முப்பது சீட்டுகள் உறுதியாகிவிட்டது.

Sunday, January 9, 2011

மீன்களுக்கு உணவு- அரசியல் குளம்

போனவாரம் விஜயகாந்த் கனவில் வந்தாரே என்று நேற்றுதான் தே.மு.தி.க (உரிமை மீட்பு மாநாடு!) சேலத்தில் நடந்த தினத்தில் விருதகிரி படம் பார்த்துமுடித்தேன்.முதலமைச்சரே ஆகிவிட்ட நிலையிலும் கூட எம்.ஜி.ஆர் , ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்றுதான் படமெடுத்தார். அவர் மக்களுக்கு ஆற்றவேண்டியவற்றை (அதாவது உரைகளை) நாடோடி மன்னனிலேயே ஆற்றிவிட்டதால் விஜயகாந்த் அளவு மெனக்கெடவில்லை. விருதகிரியில் வில்லன்கள் மன்சூர் அலிகான்,ஆஷிஸ் வித்யார்த்தி முதல் காமெடியன்கள் வெளிநாட்டு முகங்கள் என அனைவரும் விஜயகாந்தின் கொ.ப.செ க்கள்தான்.படம் பார்த்துவிட்டு முதுகு வலியால் நான் அவதிப்பட்டுக்கொண்டிருந்த போது உரிமை மாநாடு சிறப்பாக (பெரிய வெட்டுக்குத்து இல்லாமல்) முடிவடைந்துவிட்டது.

நாங்கள் ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு பேனர் நாட்டியதை கின்னஸில் பதியுங்கள் என சுதீஷ் சொல்லியதன் மூலம் தமிழக வெகுஜன கொண்டாட்டக் கலாசாரத்துக்கு கட்சி தயாராகிவிட்டது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

பா.ம.க அடுத்த மூவை சரியாக வைக்கவேண்டும் என்கிற (விஸ்வநாதன் ஆனந்துக்கு நிகரான) பதற்றத்தை எட்டியிருக்கிறது.

வைகுண்டசாமி அய்யாவின் விழாவில் ‘வேலிகள் இல்லா உலகம்’ என ஜெயலலிதா லாவணி பாடியிருக்கிறார்.

தேவையென்றால் விமானம் ஏறி டெல்லி செல்கிற மு.க வாசலுக்கு வந்த மன்மோகனை பார்க்கப்போகாமல் சட்டசபை வளாக மீன்களுக்கு உணவளித்துக்கொண்டிருந்துவிட்டார்.

சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் பூங்காவை அமைக்கத் தமிழகத்துக்குத் தெரியவில்லை.

ஜெயலலிதா இல்லாத மூன்றாம் அணி அமையும் பட்சத்தில் இதர இரண்டை அவர் முற்றாகப் பெருக்கித் தள்ளிவிடுவார். விஜயகாந்த்தின் பேச்சு அ.தி.மு.க - தே.மு.தி.க உறவுப் பாலத்துக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இந்த அணிச் சேர்க்கையையே அரிவாள் விரும்பவும் கூடும். அரிவாள் கைக்குப் போக விரும்பாது.

சொல்லி அடிக்கிற அழகிரியை தி.மு.க அவருக்கேற்ப நடத்தவில்லை என்பதால் பாரதூரமான விளைவுகளை கழகத்துக்கு அவர் கொணர்ந்து சேர்ப்பாரோ என்கிற அச்சுறுத்தலும் இருக்கிறது.

இந்த நிலையிலும் பத்திரிக்கைகளைப் பகைத்துக்கொள்ளும் ஜெயலலிதாவைப் பார்க்கையில் அவர் என்றும் மாறாத இளமையுடனும் நிலைமையுடனும் காட்சிதருகிறார்.

அற்றுப்போகாத கூட்டு தொல். திருமா & தி.மு.கதான் போலிருக்கிறது. தமிழகத்தில் அடுத்த ஆட்சியும் காட்சியும் என்னவென்பது இரண்டேபேருக்குத்தான் தெரியும். ஒருவர் கடவுள் இன்னொருவர் கி.வீரமணி. இருவருமே ஒன்றும் சொல்லமாட்டார்கள் என்பதால்தான் கால’மே’ கடவுளாய் நிற்கிறது.