Tuesday, January 18, 2011

மின்னஞ்சலி

இன்று இந்தக் காலை இடையறாது மின்னஞ்சல் அனுப்பும் நண்பரின் sangkavi.blogspot.com மில் அந்தச் செய்தியைப் படித்தேன். கோபி லட்சுமண அய்யர் காலமாகிவிட்டார். அய்யர் உலக அளவில் அறியப்படவேண்டியவர். உள்ளூர் அலவிலேயே கண்டுகொள்ளப்படாதவர்.(அவரைப் பற்றிய விதந்தலுக்கு சங்கவியின் வலைப்பூவை வாசிக்கவும்.)

இறுதிச் சடங்கில் நூற்றுக்கும் குறைவான நபர்களே வந்திருந்தனர் என்பது கோபி நகருக்கு அவர் ஆற்றிய முன்னோடித் தொண்டுகளினை ஒப்பிடுகையில் பரிதாபத்தைத் தோற்றுவிக்கறது. நூற்றுக்கணக்கான ஹெக்டேர்களை வைத்திருந்த அவரது குடும்பத்திற்கு கடைசியில் அவருக்கு ஆறடிதான் சாஸ்வதமாகியிருக்கிறது.

தன்னுயிர் இயல்பின் அடிப்படையில் அவர் (நாம் பாவிக்கிற அளவு) ‘தியாகி’யாக தன்னை உணர்ந்திருக்கமாட்டார் என எண்ணுகிறேன்.சில ஆண்டுகளுக்கு முன் அவரைப்பற்றி தேவிபாரதி அல்லது ஜோதிமணி என நினைக்கிறேன் சொல்லக்கேட்டு அவரைச் சென்று பார்க்கவேண்டும் என ஆவல் கொண்டிருந்தேன்.

ஆனால் கோபிசெட்டி பாளையத்துக்கே கூடப் போகமுடியவில்லை.இனிப் போக நேர்ந்தால் ‘இப்படியும் ஒருவர் வாழ்ந்தார்’ என எண்ணிச் சிலிர்ப்புற வேண்டியதுதான். தேசியக் கொடி போர்த்தப்படாமல் அவரது ஈமக் கிரியை நடைபெற்றது சமகால வாழ்வின் நிர்த்தாக்ஷண்யக் குறியீடு. தானமாக வழங்கப்பட்ட அவரது கண்கள் இனியடுத்த பாரத நிகழ்வுகளையும் காணக்கூடும்.

அரசியலர்கள்,ஆசிரியர்கள் , மாணவர்கள்  மற்றும் பொதுமக்கள் என அவ்வளவு ஆட்கூட்டமுள்ள ஒரு ஊரில் வெறும் நூறுபேரைத் தவிர அத்தனை ஆட்களும் படு பிசியாக இருந்திருக்கிறார்கள் எனும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

‘மந்திரியின் நாய் இறந்தது
அத்தனை பேர் இழவு கேட்க
வந்தார்கள். மந்திரி இறந்தார்.
ஒரு நாயும் வரவில்லை.’ (அனேகமாக தாகூர் என நினைக்கிறேன்)

என்கிற வாக்கியங்கள் நினைவுக்கு வருகின்றன. அப்போதைக்கு பயன் தருகிறவர்கள் பாலது உலகம் இருக்கிறது.மறுமைகளில் நம்பிக்கை இல்லாமலிருப்பது எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது. இல்லாவிடில் அவர் சுவர்க்கத்தில் துன்புறக்கூடும். அவருக்கும் மறு உலகம் பற்றிய நம்பிக்கை இல்லாமலிருப்பதையே அவரது கண் தானமும் காட்டுகிறது.

2 comments:

selventhiran said...

இனியொரு தியாகி உருவாக மாட்டான் என்று தினமணி ஆதங்கப்பட்டு அரைப்பக்க கட்டுரையொன்று எழுதியிருந்தது. அவர் வழங்கிய பள்ளிக்கூடத்திற்கே அன்று விடுமுறை வழங்காமல் விட்டு விட்டார்களாம். நானும் கண்கள் கசிந்தேன்.

Anonymous said...

கோபி - டைமண்ட் ஜூப்ளி - வைரவிழா - பள்ளி உருவாக்கியவர்தானே? வா.மணிகண்டன் இவரை சந்தித்து எழுதியதாக நினைவு.
இது போன்ற மேன்மக்கள் இனி வர வாய்ப்பெ இல்லை.
-ஜெகன்